×

மக்களவை தேர்தல்!: சென்னையில் ஏப்.8 முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு..!!

சென்னை: சென்னையில் ஏப்.8 முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களும் வைக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை ஒட்டி தபால் வாக்குகளை பெறும் பணி இன்று ( ஏப்ரல் 4 ) காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வீடு வீடாக சென்று தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்க உள்ளனர்.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தபால் வாக்குப்பதிவானது நடைபெற்று வருகிறது. மக்களவை தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கொரோனா தொற்று உள்ளவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். தபால் வாக்கு செலுத்த விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், தபால் வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. ஈரோட்டில் 3,054 பேர் விண்ணப்பித்த நிலையில், 3001 பேர் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் ஏப்.8 முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிப்பார்கள். சென்னையில், 39,01,167 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் மாற்றுத்திறனாளிகள் 11,369 பேர், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 63,751 பேர் என மொத்தம், 75,120 வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க உள்ளனர். 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின் போது நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது கடினமாக இருக்கும் என்பதால் அவர்கள் தபால் வாக்குப்பதிவு செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நினைவுகூரத்தக்கது.

The post மக்களவை தேர்தல்!: சென்னையில் ஏப்.8 முதல் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,Chennai ,Tamil Nadu ,Electoral Commission ,
× RELATED நீலகிரி, ஈரோட்டை தொடர்ந்து...